Header Top Ad
Header Top Ad

கீழடி ஆய்வுகள் குறித்து ஈ.பி.எஸின் கேலிச்சித்திரம்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது புகார்

கோவை: கீழடி ஆய்வுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியை கேலிச் சித்திரமாக பதிவிட்டுள்ளதாக கூறி திமுக ஐடி விங்க் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

கீழடி ஆய்வுகள் சம்பந்தமாக திமுக ஐடி விங்க் கடந்த 17ம் தேதி அவர்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

அந்த பதிவில்
*வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி!

கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தினாலும், தமிழர்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு வரலாற்றை மாற்றவும், மறைக்கவும் முயற்சி செய்து வருகிறது.

பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா? வாய்திறந்து சொல்லுங்கள் பழனிசாமி!?*
என்றும் அதன் கீழ் எடப்பாடி பழனிச்சாமியின் கேலிச்சித்திர புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.

Advertisement

இதனை கண்டித்தும் அந்த பதிவை நீக்குவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து பேசிய அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் விக்னேஷ், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து நாகரீகமற்ற முறையில் அந்த பதிவை பதிவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர் அதனை பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அதன் மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா(அமைச்சர்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றும் கூறினார். மேலும் கீழடி ஆய்வுகள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது தான் தொடங்கப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் மக்களிடம் இருந்து அதனை திசை திருப்புவதற்காகவே திமுகவினர் இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டினார்.

Recent News