கோவை: அரசு அளித்த பட்டாவில் இருந்த பிழையால் தம்பதி தீக்குளிப்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் இருந்த பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய மறுப்பதாகவும் அதேவேளையில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி மூன்று பேர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறி தம்பதியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.அப்போது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி வந்த நிலையில் கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்- நாகமணி தம்பதியர் திடீரென தங்களது கையில் இருந்த மண்ணெண்ணெயை தலைமீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து தீப்பெட்டியை பறித்தனர்.மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல்துறை வாகனத்தில் நேற்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே கதறி அழுத தம்பதியர் தங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2022 ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு இலவசமாக ஒன்றரை சென்ட் பட்டா கொடுத்ததாகவும் அதில் பட்டா எண் பிழையாக அச்சிடப்பட்டிருந்ததால் அதை சரி செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை நாங்கள் புகார் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.
இப்போது கூட அங்கே சென்று பிழையை சரி செய்து தருமாறு கேட்டால் அவர்கள் சரி செய்ய மறுத்து விட்டார்கள் என்றும் அதே வேளையில் தங்களது இடத்தை பக்கத்தில் உள்ளவர்கள் மூன்று பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் கூறிய வெங்கடாசலம் நிம்மதியாக வாழ முடியாத சூழலில் நாங்கள் வேறு வழியின்றி தற்கொலை செய்ய இங்கே வந்தோம் என்றும் இப்போது இல்லாவிட்டாலும் இன்னொரு முறை நாங்கள் தற்கொலை செய்வோம் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
ஆட்சியர் அலுவலக அலுவலக வளாகம் முன்பாக தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

