கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பு அனைத்தும் தெரியவரும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மேற்கு மாவட்ட தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுவதாக தெரிவித்தார். நாளை திருப்பூர் தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஒன்பதாம் தேதி மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பத்தாம் தேதி தர்மபுரியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைப்பு குறித்தான கேள்விக்கு, ஒருங்கிணைப்பு என்று கூறியவர்களை கட்சியை விட்டு நீக்கினால் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார். 2024 திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் யார் என்று உங்களுக்குத் தெரியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது யார் என்றும் உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியிலிருந்த மூத்த நிர்வாகி என்றும் இன்னொரு மூத்த நிர்வாகி முத்துசாமி என்றும் கூறிய அவர் ஆனால் முத்துச்சாமி தற்போது திமுகவிற்கு சென்று விட்டார் என்றார். அனைவரையும் ஒன்றும் இணைக்க வேண்டும் என்பதுதான் செங்கோட்டையன் அவரது கோரிக்கையாக இருந்ததாகவும் அதற்காக எங்களை எல்லாம் சந்தித்ததார், அதனால் அவர் ஏதோ பஞ்சமகா பாவம் செய்தது போல் கட்சியில் இருந்து நீக்கியதற்கு பிறகு அவர் வீட்டில் சென்று உறங்கிக் கொள்ள வேண்டுமா அல்லது விவசாயத்தை பார்க்க வேண்டுமா? அதனால் அவர் மிக வருத்தத்துடன் பேசிவிட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் என தெரிவித்தார்.
செங்கோட்டையன் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் பதவி ஆகியவற்றையெல்லாம் கேட்கவில்லை அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார் அதற்காக அவர் வெளியேற்றப்பட்ட பிறகு பொறுமையை இழந்த பிறகு இயேசுநாதர் கூறியதைப் போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்கு தகுதியானவர்கள் அவர்கள் கிடையாது என்பதால் செங்கோட்டையன் அவர் வழியில் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
டிடிவி தினகரன் நான் தான் அவரை அனுப்பி வைத்து விட்டதாகவும் சிலர் கூறியதாக தெரிவித்த அவர் அது மிக மிக தவறு என்றும் அது செங்கோட்டையனை அவமதிப்பது போன்று ஆகும் என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நான் வெளியேறியதற்கான காரணம் என்னவென்று கூறிய அவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்த அவர், அவர்செய்த துரோகத்தின் காரணமாகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவானது என்றும் அதேசமயம் அண்ணாமலை எனக்கு ஒரு நண்பர் அவர் தூண்டியதால் தான் நான் வெளியேறினேன் என்று கூறுவதும் வருந்தத்தக்க ஒன்று என தெரிவித்தார். அண்ணாமலை தற்பொழுதும் செல்போனில் பேசும் பொழுதெல்லாம் நட்பு இறுதியாக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்றுதான் கூறுவார் என தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் சுயலாபத்திற்காக வெளியில் சென்று இருக்கலாம் சிலர் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி குறுத்தான கேள்விக்கு அம்மாவின்(ஜெயலலிதா) பிறந்தநாள் வரும் நாட்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இடம் பெறுவோம் என்பதை முடிவு செய்வோம் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை தாண்டி எங்களுக்கு வேறு யார் மீதும் வருத்தம் இல்லை என்றார். 2017 ஆம் ஆண்டு நான் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பொழுது சிலருக்கு பயத்தை உருவாக்கியது என்றும் அதனால் சட்டமன்றத்துக்கு அந்த நபர் வரும்பொழுது அந்த கூட்டணியில் நான் வரவில்லை இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக 40 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை உங்கள் கூட்டணியில் ஒதுக்கீடு கொடுத்தால் அவர்கள் போட்டியிடட்டும் நான் போட்டியிடவில்லை என்று நான் பொதுக்குழுவிலும் கூறினேன் என தெரிவித்தார்.
என்னை சந்திப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுத்தல் இருக்கும் என்றும் இருந்தாலும் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் அது நடக்காது என்று தெரிந்தும் நான் முயற்சி செய்யுங்கள் எனக் கூறினேன் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி செய்த அநீதியை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் தான் துரோகத்திற்கு எதிராக இந்த இயக்கம் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் துரோகத்தை வீழ்த்த வேண்டும் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் யாரும் நம்பிக்கை துரோகத்தை அரசியல் ரீதியாக எண்ணிக்கூட பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் துரோகத்தை வேரடி மண்ணோடு சாய்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
செங்கோட்டையன் வேறு கட்சிக்கு சென்றதும் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்தின் காரணமாகத்தான் என தெரிவித்த அவர் அதே போன்று என்னுடைய 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் என்னுடன் தற்பொழுதும் இருக்கிறார்கள் சிலர் வெளியேறியது என்பது அவர்களுடைய சுயநலம் அவசரமாக பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணமாக கூட இருக்கலாம் என தெரிவித்தார். மேலும் என்னை கட்சியில் இருந்து தான் நீக்கினார்களே தவிர நானாக வெளியேறவில்லை என்றார்.
செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக பொதுவெளியில் என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பிய அவர் எனது கட்சியில் யாராவது அதுபோன்று செய்தால் நான் அவர்களை அழைத்துப் பேசுவேன் என தெரிவித்தார்.
மேலும் சில கட்சிகள் கூட்டணிக்காக தங்களிடம் பேசி வருவதாகவும் நாங்கள் அவர்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்றும் பேசி வருவதாகவும் தெரிவித்த அவர் இன்னும் காலம் இருக்கிறது இறுதியாக முடிவு எடுத்து துரோகத்தை வீழ்த்துவதற்கு எது சரியான கூட்டணியோ அந்த கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
SIR தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் அவசரப்பட்டு அதற்கு பதில் சொல்ல தேவையில்லை, இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனவே அவசர கதியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச வேண்டாம் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது, அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இங்கு அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் நியாயமான ஒன்று என தெரிவித்த அவர் அதனால் அந்த விஷயத்தில் அரசாங்கமும் சரி நீதிமன்றங்களும் சரி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். எனவே எந்த ஒரு கட்சியும் அமைப்பும் மதத்தை தெய்வத்தை தெய்வத்தின் பெயரை கையில் எடுத்து அரசியல் செய்யாமல் இருப்பதே தேவையற்ற குழப்பங்களை உருவாக்காமல் இருக்கும் என்பது கட்சியின் தலைவராக எனது எண்ணம் என தெரிவித்தார்.
தர்மபுரியில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் ஒருவர் காவலரின் கையை கடித்தது தொடர்பான கேள்விக்கு சிரித்துக் கொண்டே அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றார்.
இரண்டு தேர்தல்களில் நாங்கள் தனித்து நின்றோம் ஆனால் எங்களை வெற்றி அடைய செய்யவில்லை எனவேதான் கூட்டணியில் நிற்கிறோம் என தெரிவித்தார். இஸ்லாமிய சிறைவாசிகளின் பரோல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், விடுதலை என்பது வேறு பரோல் என்பது வேறு என்றும் பரோல் என்பதை நீண்ட காலம் வழங்க முடியாது அதே சமயத்தில் தேர்தல் காலகட்டத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றவில்லை இருந்த பொழுதிலும் 2024 இல் மக்கள் அவர்களுக்கு தான் வாக்களித்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
2024 தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனை பரிசோதித்து சரி செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் இஸ்லாமிய சிறைவாசிகளை வெளியில் கொண்டு வருவதற்கான ஆட்சியை நான் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு அயோத்தியில் ராமர் கோவில் உள்ளது திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ளது, அப்படி இருக்கும் பொழுது திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது நயினார் நாகேந்திரன் அவர் வகிக்கும் பொறுப்பிற்காக அதை கூறி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
கட்சிக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எத்தனை பேர் வருவார்கள் அவர்களுகான இட வசதி அனைத்தையும் கட்சியினர் கூற வேண்டும், அதற்காக அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளது அதனை பின்பற்றினால் காவல்துறை அனுமதி கொடுக்கப்படும் என கூறினார். மேலும் ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் கூட்டத்திற்கும் செங்கோட்டையன் முறையாக கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றி கூட்டத்தை சிறப்பாக நடத்துவார் என பதில் அளித்தார்.
OPS, அமமுக உடன் தேர்தலுக்கு முன்பு கலந்தாலோசிப்பாரா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பொறுமையாக இருங்கள் அம்மா(ஜெயலலிதா) பிறந்த நாளுக்கு முன்பு அனைத்தும் தெரியும் என பதில் அளித்தார்.


