கோவை: நவீன மயமாக்கப்பட்ட உக்கடம் பேருந்து முனையம் இன்று முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வசதிகள் உள்ளன.
கோவையில் உக்கடம் பகுதி என்பது மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள பேருந்து நிலையத்தில் நகர்ப்புற பேருந்துகளும் பொள்ளாச்சி பழனி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் ஒரே பேருந்து நிலையத்தில் இயங்கி வந்தன.

அனைத்து பேருந்துகளும் ஒரே பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வந்ததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. குறிப்பாக பண்டிகை தினங்களுக்கு வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிகளுக்கு உள்ளாகி வந்தனர். எனவே இதற்கு மாற்று நடவடிக்கை தேவை என்று பல்வேறு பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தை இரண்டு முனையமாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்தது.

அதன்படி உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் இருந்த மீன் மார்க்கெட், அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு உக்கடம் பேருந்து நிலையத்தின் ஒரு முனையம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு தற்பொழுது உக்கடம் பேருந்து நிலையம் ஒன்றாவது முனையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
13 கோடி ரூபாய் மதிப்பில் 3.27 ஏக்கரில் நவீனமயமாக்கப்பட்ட இந்த பேருந்து முனையத்தில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தும் தளங்கள், வணிக வளாகங்கள், கழிவறை வசதிகள், நேரடி பேருந்து கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் அறிவிப்புகள், பொது WiFi வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதி, சிசிடிவி கண்காணிக்கும் அறை மற்றும் அவசர பதிலளிப்பு அமைப்புகள், நவீன மயமாக்கப்பட்ட மேற்கூரை ஆகிய வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பேருந்து முனையத்தை இன்று முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்கடம் பேருந்து நிலையம் இரண்டாவது முனையம் அமைக்கும் பணிகளும் கூடிய விரைவில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.

