கோவை: கோவையில் உள்ள துணிக் கடையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஒப்பணக்கார வீதியில் பாபு என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த துணிக் கடையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
கடையின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அப்பகுதியில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கும்
தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேர சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றித நிலையில் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர். 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டன.
அதிகாலை நேரத்தில் நடந்த தீ விபத்து காரணமாக ஒப்பணக்கார வீதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டவுன்ஹாலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



