கோவை: கோவையில் வெளிநாட்டு மாணவிகள் சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கல்லூரி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு கடவுளை வழிபட்டனர்.

தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். மைதானத்தின் நடுவே வைக்கப்பட்ட பொங்கல் பானையைச் சுற்றி நின்று, கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாடலுக்கு கும்மி நடனம் ஆடினர்.
இதில் கல்லூரியில் பயிலும் சிரியா நாட்டைச் சேர்ந்த மாணவிகளும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று கும்மி நடனடத்தில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

