கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் கஞ்சா, பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் ஜெயிலர் சரவணகுமார் மற்றும் சிறை போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது டவர் பிளாக் 3-ல் இருந்த கைதிகள் 3 பேரிடம் சோதனை செய்தார்.
அதில் அவர்களிடம் கஞ்சா மற்றும் பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயிலர், கைதிகளிடம் இருந்த 50 கிராம் கஞ்சா, ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கைதிகள் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன் (43), கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார் (41) மற்றும் ரத்தினபுரியை சேர்ந்த கவுதம் என்கிற ஒற்றை கவுதம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது, அவர்களுக்கு கஞ்சா கொடுத்தது யார்? பணம் எப்படி வந்தது. சிறையில் அவர்கள் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
                                    
