கோவை: கோவையில் எட்டிமடை அருகே 1.25 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் நகை வியாபாரியாக உள்ளார். இவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி சென்னையில் இருந்து நகைகள் தயாரிக்க 1.25 கிலோ தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு கோவை வழியாக கேரளா சென்றார்.
அப்போது எட்டிமடை அருகே லாரியை கொண்டு வழிமறித்த மர்ம கும்பல் தங்க கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிர படுத்தினர்.
இந்த வழக்கில் இதுவரை கேரளாவை சேர்ந்த அன்சத், விஷ்ணு, அஜித், சனீஸ், கோகுல், கருண், சிவதாஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில் வாளையாறு சோதனைச் சாவடி அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த சதாம் உசேன், ரோஷன் ஆகிய இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்க கட்டி கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.