Header Top Ad
Header Top Ad

பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- கோவையில் மனு…

கோவை: பரிதாபங்கள் youtube சேனலின் கோபி, சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மனு அளித்துள்ளனர்.

பரிதாபங்கள் என்ற youtube சேனலில் அண்மையில் வெளியான சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோவிற்கு பல்வேறு சாதிய கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் அந்த வீடியோவில் உள்ள கோபி, சுதாகர், டேவிட் ஆகிய மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த வீடியோவை உடனடியாக நீக்கி அந்த சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

மேலும் சௌத்ரி தேவர் என்பவர் கோபி, சுதாகருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் கோபி சுதாகர் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோபி சுதாகர் வெளியிட்ட அந்த வீடியோவில் எந்த ஒரு சாதியினரையும் குறிப்பிடவில்லை என்றும் ஆனால் சாதிய வெறி பிடித்தவர்கள் கோபி, சுதாகரை மிரட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ள திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நிர்மல் குமார் இருவருக்கும் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் எம் ஆர் ராதா அந்த காலத்தில் எவ்வாறு சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினாரோ அதுபோன்று தற்பொழுது கோபி சுதாகர் இருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்திய வருவதாகவும் எனவே தமிழக அரசு இருவருக்கும் எம் ஆர் ராதா என்ற ஒரு விருதை உருவாக்கி அதனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

Recent News