கோவை: கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு துரைசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் ராஜ் என்பவரது மகன் கார்த்திக்(27). இவர், அதே பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையங்களில் கஞ்சா, போக்சோ வழக்கு உள்ளது.
இந்நிலையில், இந்த 2 வழக்குகளிலும் கடந்த 2020ம் ஆண்டு கார்த்திக்கின் தங்கை கணவர் தர்மராஜ் (28) என்பவர் பணம் செலவு செய்து கார்த்திக்கை ஜாமீனில் எடுத்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும், கார்த்தி நடவடிக்கை மாற வில்லை. இதனை தர்மராஜ் கண்டித்துள்ளார். அதற்கு கார்த்திக், நீ பணம் செலவு செய்து பெயில் எடுத்தால் நான் உன் பேச்சை கேட்கணுமா? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 26-7-2020ம் ஆண்டு கார்த்திக் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜ் மற்றும் கார்த்திக் இடையே மீண்டும் வழக்குகள் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் கீழே உடைந்து கிடந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தர்மராஜை குத்த முயன்றார். அவர் விலகியதால் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த கார்த்திக்கின் பாட்டி கன்னியம்மாள் (75), தனது பேரனை கண்டித்ததோடு, போலீசில் தகவல் கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் கையில் வைத்திருந்த ஜன்னால் கண்ணாடியால் கன்னியம்மாள் கழுத்தில் குத்தி கொலை செய்தார். இதனைத்தொடர்ந்து தர்மராஜையும் குத்தினார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். இந்த கொலை வழக்கில் கார்த்திக்கை பீளமேடு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், பாட்டியை கொலை செய்த பேரனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜரானார்.



