கோவை: மாதம் ஒரு நாள் தூய்மை பணியாளர்களுக்கு என குறை தீர்ப்பு கூட்டம் நடத்தும் கோரிக்கையை முதலமைச்சருக்கும் முன் வைப்பதாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மேயர் உட்பட துரை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனுக்கக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறித்து வாரிய தலைவருக்கு எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிகப்படியான தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவுன் சம்பளத் தொகையும் கோவை மாவட்டத்தில் தான் அதிகமாக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் ஊதியம் குறித்து ஒப்பந்த நிறுவனம் மற்றும் அரசு அலுவலர்களை அழைத்து வரன்முறை அமைத்து ஊதிய உயர்வு குறித்து முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதாக ஆதாரங்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மாதம் ஒரு நாள் தூய்மை பணியாளர்களுக்கு என குறை தீர்ப்பு கூட்டம் நடத்தும் கோரிக்கையை முதலமைச்சருக்கும் முன் வைப்பதாக தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்கள் வருகை நேர பதிவை அரை மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாகவும் அதே சமயம் அரை மணி நேரம் தாமதமாக வரும் பொழுது பணி முடியும் நேரத்தையும் அரை மணி நேரம் கூடுதலாக்கி கொள்ள வேண்டும் என்றார். தூய்மை பணியாளர்கள் சிலர் கையுறை முக கவசம் ஆகியவற்றை அணியாதது குறித்து அவர்களிடம் கேட்ட பொழுது கையுறை அணிவதால் வியர்த்து கைகளில் நோய்கள் ஏற்படுவதாகவுன் முக கவசம் அணியும் பொழுது சுவாசத்தில் சிரமங்கள் ஏற்படுவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிர் பாதுகாப்பிற்காக தான் உபகரணங்கள் வழங்கப்படுவதாக தூய்மை பணியாளர்களிடம் நான் எடுத்துரைத்ததாகவும் சிரமங்கள் ஏற்படும்பொழுது மாநகராட்சி ஆணையாளர் ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். எவ்வளவு கூறினாலும் தூய்மை பணியாளர்கள் சிலர் பாதுகாப்பில் கவன குறைவாக இருக்கிறார்கள் என்றும் எனவே அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கி பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தான அவசியத்தை வழங்குவோம் என தெரிவித்தார்.
இடம் மாறுதல் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் அதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நடைமுறை சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் அதனை தவிர்த்து பழிவாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள் என்று கூறியிருப்பதாக தெரிவித்தார்.