கோவை: தாயுமானவர் திட்டத்தில் கால்நடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளை விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 100 கால்நடை வளர்ப்போரின் சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு பசுவிற்கு ரூ.35 கிலோ மதிப்புள்ள தீவனம் தினசரி 3 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ சமச்சீர் தீவனமும், ரூ.100 மதிப்புள்ள தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத்தீவனம் ஒரு மாதத்திற்கு 1 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு மற்றும் வைட்டமின் இணைத்தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து உள்ளூரிலுள்ள சங்கத்தில் தொடர்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளர்கள் இத்திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மகளிர், ஆதரவற்றோர். விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 15.09.2025 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.