கோவை: கோவையில் 1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கைது
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல் கட்டமாக ரூ.3 லட்சம், பின்னர் ரூ.2 லட்சம் என லஞ்சம் கேட்ட இந்திரா, இறுதியில் ரூ.1.5 லட்சம் பெற சம்மதித்தார். லஞ்ச பணத்தை நேரடியாகக் கை வைக்காமல் பையில் வைக்குமாறு, சுரேஷ்குமாரிடம் அவர் கூறியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே தகவல் பெற்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைவில் கண்காணித்து வந்தனர்.
அந்த நேரத்தில் ரோட்டில், பணம் பரிமாற்றம் நடக்கும் போது, இந்திராவை அதிகாரிகள் பிடித்து, ரூ.1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.