கோவை: கோவையில் காட்டுயானைகளை தடுக்க உருக்கு கம்பி வேலி அமைப்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு கள ஆய்வு மேற்கொண்டனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மேட்டுப்பாளையம், கோவையில் அட்டுகல் முதல் பொம்மணம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர், போளுவாம்பட்டி வன சரகத்தில், பெரும்பள்ளம் முதல் தேவராயபுரம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெலி அமைக்கும் பணியை ஏப்ரல் மாதம் வனத் துறையினர் துவங்கினர்.

அங்கு உருக்கு கம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் உருக்கு கம்பி வேலி அமையும் இடங்களை செப்டம்பர் 5 மற்றும் 6 நேரில் ஆய்வு செய்வதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் நேற்று கோவை வந்தடைந்தனர்,
கோவை, மேட்டுப்பாளையத்தில் உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து போளுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட குப்பேபாளையத்தில் ஆதிநாராயணன் கோவில் பகுதியில் உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அரசு அலுவலர்கள் ருக்கு கம்பி வேலி வரும் இடங்களை நீதிபதிகளிடம் விளக்கினர்.
அப்போது விவசாயிகள் ஒருங்கிணைந்து நீதிபதிகளை சந்தித்து அவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தனர்.
அப்பொழுது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஏற்படுத்தும் உயிர் சேதம் மற்றும் பயிர் சேதங்கள் குறித்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.