கோவை: பிரதமர் ரோடு ஷோ நடத்தினால் திமுக வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை கோயம்புத்தூர், அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் சூலூர், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்தார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கோயம்புத்தூர் மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பிரச்சார உரையில் அவர் கேட்டுக்கொண்டார்.
மு க ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,
‘திமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளோம். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பல திட்டங்கள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்கா, ஜிடி நாயுடு மேம்பாலம், உலக தரத்திலான ஹாக்கி மைதானம், பில்லூர் மூன்று குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள், எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம் நவீனமயமாக்கல், விசைத்தறி மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண குறைப்பு, விசைத்தறிகளுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம், குறிச்சி தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்காவிற்கான ஆரம்பகட்ட பணிகள் இவற்றோடு காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகள் நிறைவு செய்து திறக்கப்பட உள்ளது, இவை அனைத்தும் திமுக செய்துள்ள சாதனைகள் ஆகும். இவை தொடர திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இபிஎஸ் ஆட்சி காலத்தில் இதுபோன்று செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா? கடந்த தேர்தலில் அதிமுக தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுகவின் மகளிர் உரிமை திட்டம், இலவச விடியல் பயணம் திட்டம் ஆகியவற்றை காப்பியடித்து அதிமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதிமுகவின் சாதனைகள் என எதுவும் இல்லை.
இதே நிலைதான் பிரதமருக்கும். தமிழ்நாட்டிற்கு வழங்கிய சிறப்பு திட்டம் என எதுவும் சொல்ல முடியாது. கடந்த 2024 தேர்தலின் போது பிரதமர் சென்னையில் ரோடுஷோ நடத்தினார், 40க்கு 40 என திமுக வெற்றி பெற்றது. அதேபோல் இப்போதும் பிரதமர் சென்னைக்கு வருகிறார். இந்த முறை 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழை தமிழர்களை தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்பப்படுவதாக பொய்யான தகவல்களை கூறினார். தமிழ்நாட்டில் பல இனம், மொழியைச் சேர்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் மீது அபாண்டமான பொய்களை கூறுகின்றனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைவரிடமும் சென்றடைந்து வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு புதிய பம்பு செட்டு வழங்கும் திட்டம் விவசாயிகள் மட்டுமின்றி கோவையின் பிரதான தொழிலாக உள்ள மோட்டார் பம்பு உற்பத்தியையும் ஊக்குவிக்கும். நெல் பால் ஆகியவற்றின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் முறைலான மானியத்தோடு வங்கி கடன் வழங்கப்படும்.
திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. இதைக் கூறி நாங்கள் வாக்கு கேட்கிறோம். தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? எனும் இந்த ஜனநாயகப் போரில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

