கோவை: மேடையில் இருப்பவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கீழே அமர வேண்டிய நிலை வரும் என்று செந்தில் பாலாஜி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில் பாலாஜி, கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நம்முடைய தலைவர் முதல்வர் தான் வேட்பாளர் என நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என கூறினார். அனைவரும் உங்கள் வாக்குச்சாவடியில் கடந்த முறை பெற்ற வாக்குகளை காட்டிலும் அதிக வாக்குகள் பெறுவதற்கு செயல்பட வேண்டும் எனவும் ஒவ்வொருவரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து நமது திட்டங்களை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் சென்று நமது திட்டங்களை எடுத்துக் கூறி அவர்களை மன மாற்றம் செய்து நமக்கு வாக்காளர்களாக மாற்றினால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னைக்கு அடுத்தபடியாக முதல்வர் அதிகமாக வருகை புரிந்தது கோவை மாவட்டத்திற்கு தான் அதிக திட்டங்களை கொடுத்ததும் கோவை மாவட்டத்திற்கு தான் என்று தெரிவித்த அவர் முதல்வருக்கு நாம் செலுத்துகின்ற நன்றி கடன் கோவையில் 10 தொகுதிகளிலும் வென்றோம் அதிலும் தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம் என்ற சரித்திர சாதனையை உருவாக்கும் வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மேடையில் உள்ள நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கீழேதான் அமர வேண்டும், அது நானாக இருந்தாலும் சரி, கீழே இருப்பவர்கள் நன்கு வேலை செய்தால் அவர்கள் மேடைக்கு வரலாம் என கூறிய அவர் கட்சி நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒன்றிணைந்து பணி புரிய வேண்டும் இதனை வேண்டுகோளாகவும் வைக்கிறேன் எச்சரிக்கையாகவும் கூறுகிறேன் என்று கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து உங்கள் பகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறீர்களோ அதற்கு தகுந்தார் போல் பரிசுகள் உண்டு என தெரிவித்தார். பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியாக பணி செய்தால் தொண்டாமுத்தூரில் உதயசூரியன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற நிலையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் தான் இயக்கத்தின் ஆணிவேர் என்று குறிப்பிட்ட அவர் தேர்தல் களத்தில் அவர்கள் தான் களத்தில் நின்று பணியாற்றுவார்கள் எனவே அவர்கள் கூறுகின்ற கருத்திற்கு நாம் முன்னுரிமை தர வேண்டும் அவர்களுக்கான பணிகளை செய்து தந்திட வேண்டும் அடிமட்ட தொண்டர்களை மதிக்காதவர்கள் அங்கு இருந்திட முடியாது எனவே முதல் உரிமை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தான் கொடுத்தாக வேண்டும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் எனக் கூறிய தலைவர் அறிவிக்கும் வேட்பாளரை தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு தந்திருக்கக் கூடிய திட்டங்களையும் வீடுகள் வாரியாக சென்று வாக்காளர்களை சந்தித்து எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார். வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் அணியை சார்ந்திருக்க கூடிய கழக நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க கூடிய முதல்வரின் வழிகாட்டுதலின்படி முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கோவையை பொருத்தவரை அதிமுக ஆட்சியில் போடப்படாத சாலைகளுக்காக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி முதல்வரால் வழங்கப்பட்ட சாலைகள் போடப்பட்டு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி கூடுதலாக 125 கோடி ரூபாய் நிதிகள் தரப்பட்டு சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர் விடுபட்ட சாலைகளில் தரமான தார் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தருவதற்கு அரசு நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று பேசி இருந்தது குறித்தான கேள்விக்கு, தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களை பற்றி ஏன் கேள்வி கேட்கிறீர்கள் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருப்பவர்களைப் பற்றியும் அரசியல் களத்தில் மக்களை சந்திப்பவர்களை பற்றி கேள்வி கேளுங்கள் மக்களோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை பற்றி கேள்வி கேளுங்கள் என கூறினார். கோவையைப் பொருத்தவரை அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
யார் என்ன கொடுத்தாலும் இந்த தேர்தலை பொருத்தவரை தமிழக மக்கள் தமிழகத்தை மீண்டும் ஆளக்கூடியவர் முதல்வர் தான் என்று முடிவு செய்து விட்டதாகவும் அதன் அடிப்படையில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு யார் என்ன கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்று தெரிவித்தார். தொண்டாமுத்தூர் தொகுதியில் கூட 66,000 பேர் மகளிர் உரிமைத் தொகையை வாங்கக்கூடிய பயனாளிகள் இருப்பதாகவும் அரசின் திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பயன் பெறுகிறார்கள் அவர்கள் அரசின் மீது பற்று கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
நிதிகள் இல்லாமலேயே தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலம் இருப்பதால் எதையாவது சொல்ல வேண்டும் என்று அவர் எதையோ கூறி வருவதாகவும் நிதி இல்லாமல் கோவையில் எப்படி அவிநாசி சாலை மேம்பாலம் கட்டப்பட்டிருக்கும் பெரியார் நூலகம் கட்டப்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி நிதிகள் இல்லாமல் எந்த திட்டங்களும் தொடங்கப்படுவதில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடியாக முதல்வர் சென்று அதனை ஆய்வு செய்து நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் துவங்கப்படுவதாகவும் அந்த திட்ட பணிகளையும் முதல்வரே ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே நமக்கு தருவதைப் பற்றி கேள்வி எழுப்புவாரா? நிதியை சேர்த்து தர வேண்டும் என்று கேட்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார். 2014 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் ஆட்சி இருந்த பொழுது 27 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் தற்பொழுது ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுவது குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பலாம் அல்லவா என்றார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு பேச முடியாததை எல்லாம் இங்கு வந்து ஒரு அறிக்கையாக வெளியிடுவதாகவும் விமர்சித்தார். தேர்தல் வரை ஓட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
அனைத்து மாநில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்காக டெல்லிக்கு செல்லும் பொழுது நம்முடைய முதலமைச்சர் எப்படி கம்பீரமாக நிற்பார் என்று அனைவரும் பார்க்கிறார்கள் டேபிளுக்கு அடியில் யார் படுத்திருந்தார்கள் என்றும் பார்த்திருக்கிறார்கள் இப்படி இருக்கும் பொழுது அவர் போய் இதை எல்லாம் கூறலாமா என்று எடப்பாடி பழனிச்சாமியை சுட்டிக்காட்டினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறிய ஒரு முதல்வர் அரசை பற்றி குறை கூறலாமா என கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி அவரெல்லாம் அரசை விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அமைய வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு, வானதி சீனிவாசன் முதலில் மணிப்பூர் சென்றாரா இல்லையா என கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு பாதுகாப்பான அரசாக தமிழகம் உள்ளது என்றும் மகளிரும் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அரசை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று மகளிர்க்கு தெரியும் என கூறினார். என அனைத்திலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது அதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
கோவையில் எஸ்பி வேலுமணியா செந்தில்பாலாஜியா என்ற கேள்விக்கு யாரும் யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றும் கோவையில் ஒரு எஸ் பி வேலுமணி சென்றால் இன்னொரு எஸ்பி வேல் மணி வருவார் அதே போல் திமுகவில் ஒரு தொண்டாமுத்தூர் ரவி சென்றால் இன்னொரு தொண்டாமுத்தூர் ரவி வருவார் என தெரிவித்த அவர் எங்களைப் பொருத்தவரை ஓரணியில் தமிழ்நாடு என்பதில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். நாங்கள் கோவையில் தேர்தல் பணிகளை துவங்கி அதிக வருடங்கள் ஆகிவிட்டதாகவும் சிலர் யாரோ இப்பொழுதுதான் டோக்கன் தரத் வாங்கியுள்ளார்கள் எனவும் கூறினார்.

