கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற சுதந்திர தின விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
கோவை வ.உ.சி மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி நிறத்திலான மூவண்ண பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. மேலும் அமைதியின் சின்னமாக வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறை, மருத்துவ துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதனை அடுத்து, வாகா எல்லையில் நடத்தப்படுவது போன்ற சிறப்பு அணி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தேசப்பற்று நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை பொதுமக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் என பலரும் கண்டுகளித்தனர்.