கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையானது வரும் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பட்டாசு கடைகள், துணிகடைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பல்வேறு புதிய பட்டாசுகள் மறைமுகப்படுத்தப்பட்டுள்ளது முன்னிட்டு பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்துகளில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை ரயில் நிலையத்தில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயணிகள் எடுத்து வருகிறார்களா என்ற சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதை அறிய பயணிகளின் உடைமைகளை போலீசார் முழுவதும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
தடை விதிக்கப்பட்டுள்ளதை மீறி ரயிலில் பட்டாசுகளை கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



