கோவை: வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் துரோகம் செய்தவர் கமல் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 82 வது வார்டில் மக்கள் சேவை மையம் சார்பில் நலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார். முன்னதாக அப்பகுதியில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர் மாநாடு குறித்து வீட்டு தொடர்பு இயக்கத்தை துவக்கி வைத்து மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு வாரமும் தெற்கு தொகுதியில் இலவசமாக மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர் மாநாடு குறித்தான வீட்டு தொடர்பு இயக்கம் என்ற முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகம் ஒரு ஆன்மீக பூமியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்படி எல்லாம் இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி வருகிறது என்பது போன்ற தகவல்களை சேர்த்து கூறி வருவதாக தெரிவித்தார்.
மக்களுடைய ஆதரவை பெற முடியாத கமலஹாசன் சினிமா ஷூட்டிங் நடத்துகின்ற பொழுது பேசுகின்ற வசனத்தை எப்படி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது இல்லையோ அது போன்று மக்கள் முன்பு பேசிவிட்டு தன்னுடைய சுயநலத்திற்காகவும் பாராளுமன்றத்திற்குள் சென்று விட வேண்டும் என்ற ஆசைக்காகவும் வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். இதன் வாயிலாக அவருக்கு ஒரு பதவி கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
தமிழக முதல்வர் மு க அழகிரியை சந்தித்தது குறித்தான கேள்விக்கு அண்ணனும் தம்பியும் பிரிந்திருப்பதும் பின்னர் சேர்வதும் என்பது குடும்பத்தில் இருக்கக்கூடியது தான் ஆனால் ஏதாவது ஒரு ஆதாயத்திற்கு என்றில்லாமல் பாசத்துடன் சென்று இருந்தால் சந்தோஷம் என தெரிவித்தார். மதுரை பொதுக்கூட்டத்தின் போது ஒரு இடத்தில் தூர்வாரப்படாமல் பேனர் கொண்டு மறைத்திருந்தது குறித்தான கேள்விக்கு, அங்கு மட்டும் இல்லை கோவையிலும் அது போன்று தான் இருப்பதாகவும் மருத்துவ முகாம் நடக்கின்ற இந்த இடத்தில் கூட குப்பைகள் இருந்ததாகவும் தற்பொழுதுதான் அதை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதுதான் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் சென்றாலும் சரி மக்கள் பிரதிநிதி சென்றாலும் சரி மக்களுக்கு இதுதான் நிலைமை என தெரிவித்தார். சாக்கடையை மூடிவிட்டு மக்களிடம் மறைக்க முடியுமா என்று இந்த அரசு பார்க்கிறது ஆனால் மக்களே தற்பொழுது அதனை திறந்து காட்டுவதாக தெரிவித்தார்.
தீவிரவாத எண்ணம் கொண்ட குழுக்களால் பாதிப்பு என்பது வடகிழக்கு மாநிலங்களில் பெரிதளவு குறைக்கப்பட்டு ஜனநாயக பாதைக்கு அவர்கள் தற்பொழுது திரும்பி உள்ளதாகவும் இது போன்ற இயக்கங்களுக்கு Main Stream Politicians ஆதரவளிப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்று என தெரிவித்தார்.
மத்திய அரசு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி அளிக்கிறது என்று பிரதமர் ராமேஸ்வரத்தில் பேசியிருக்கிறார் என்றும் அவர் பேசுவதை நல்லபடியாக படித்துப் பார்த்தால் தெரியும் என்றும் கூறிய அவர் இவர்களுடைய(திமுக அரசு) இயலாமைக்கு மத்திய அரசை குறை கூறுவது என்பது அவர்களுடைய பழக்கம் என தெரிவித்தார். டாஸ்மாக் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று மக்களுக்கு தெரிகிறது நீதிமன்றமும் இது சம்பந்தமாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறது என தெரிவித்த அவர் வெகு நிச்சயமாக இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட இருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயத்தான் போகிறது அவர்கள் செய்த தவறுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என தெரிவித்தார்.