“இந்தியாவிற்கும், ஜப்பானிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜப்பானிய மொழியும், தமிழ் மொழியும் ஒரே வேரிலிருந்து துளிர்விட்ட மரங்களைப் போலவே வளர்ந்து நிற்கிறது.
தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கமும், ஜப்பானியர்களின் உணவு பழக்க வழக்கமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஜப்பானியர்களும், தமிழர்களைப் போலவே அரிசி உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற ஒற்றுமைகள் தான், ஜப்பானிய மொழி பயின்று ஜப்பானிய கலாசாரம், பாரம்பரியத்தை பற்றி ஆராய தூண்டியது. ” என தனது முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், கருணாநிதி காசிநாதன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிறந்த இவர், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டமும், கணினி அறிவியலில் முதுகலை பட்டமும் முடித்திருக்கிறார். பல உலக நாடுகளில், பல்வேறு பணிகளுக்காக பயணித்தவர், ஜப்பானிலும் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அங்கு இருந்த காலங்களில் ஜப்பானிய மொழி பயின்று, ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொண்டார்.
” எனக்கு மற்ற உலக நாடுகளை விட ஜப்பான் ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில் அந்நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றம், சுய ஒழுக்கம், சமூக ஒழுக்கம், தரம் மற்றும் பணியாற்றும் பண்புகள் பாராட்டக் கூடியதாக மொழியிலும் இருந்தன. அதனால் ஜப்பானிய பாரம்பரியத்தை ஆழமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஜப்பானிய மொழியை பயின்ற போது எனக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. அ இ உ ஏ ஐ. . ஆகிய உயிரெழுத்துக்களின் குறில் உச்சரிப்பை போலவே ஜப்பானிய மொழியிலும் இதே போன்ற அடிப்படை இருப்பதைஉணர்ந்தேன்.
அதே சமயம் இலக்கணமும், வாக்கிய அமைப்பும் தமிழோடு நெருக்கமாக இருந்தன. அதனால் ஆங்கில வழி ஜப்பானிய மொழி பயில்வதைவிட, தமிழ் மொழி வாயிலாக ஜப்பானிய மொழி பயில்வது எளிது என்பதை உணர்ந்து அது தொடர்பான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் தயாரித்தேன்.
10 ஆண்டுகால, ஆராய்ச்சியின் பலனாய் ‘தமிழ் வழி ஜப்பான் மொழி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். தமிழ் பேசும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழியிலேயே ஜப்பானிய மொழியை புரிந்து கொள்ளவும், ஜப்பானிய மொழி பயிலவும் இந்த புத்தகம் ஏதுவாக இருக்கும்.” என்பவர், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, கலாச்சாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் வலுவான இணைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார்.
தமிழ் வழியில் ஜப்பானிய மொழி பயிலும் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதுடன், ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
” ஜப்பானிய மொழி அறிவுடன், கல்வி அறிவும் இருந்தால் ஜப்பான் நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் பெறலாம். ஏனெனில் ஜப்பான் நாட்டில், இளைஞர்களை விட முதியவர்கள் அதிகம் என்பதால், அங்கு இளைஞர்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. ஆங்கிலம் பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களில் ஜப்பானிய மொழியை முதன்மையானதாக கருதப்படுகிறது.
பொறியியல் பட்டம் முடித்தவர்கள், கலை அறிவியல் படித்தவர்கள், ஏன் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு கூட வேலை வாய்ப்புகள் அங்கு நிறைய உள்ளன. பொறியியல் சுகாதாரம் முதியோர் பராமரிப்பு விவசாயம் வாகன உற்பத்தி தொழில்துறை என… 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள தமிழர்கள், ஜப்பானிய மொழியை பயின்றால் மட்டுமே போதும் என்பதுதான் கூடுதல் சிறப்பு” என உற்சாகமாக பேசுபவர், நிறைய தமிழர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல விவசாயம் பயின்றவர்களுக்கும் ஜப்பானில் விவசாய பண்ணைகளில் பணி வாய்ப்புகளை உண்டாக்கி கொடுத்திருக்கிறார்.
” ஜப்பான் பணியாற்றுவதற்கு மட்டுமல்ல படிப்பதற்கும் சிறந்த இடம். ஜப்பான் தற்போது வெளிநாட்டு மாணவர்களுக்கும், திருந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற (coe) எனப்படும் விசா முறையை பயன்படுத்தலாம். இளங்கலை பயிலும் ஆசையோடு ஜப்பான் வருபவர்கள் கட்டாயம் ஜப்பானிய மொழி கற்று இருக்க வேண்டும் அதுவே முதுகலை பட்டமும் ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ள ஜப்பான் வருபவர்களுக்கு ஜப்பானிய மொழி ஒரு தடையாக இருப்பதில்லை ஏனெனில் இங்கிருக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியிலேயே முதுகலை கல்வி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
அதனால் மொழி ஒரு தடையாக இல்லாமல் போய் உள்ளது இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகளாவிய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும்.” என்பவர், கல்வி திறன் மேம்பாடு விவசாயம் வேலைவாய்ப்பு கலாச்சார பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்திய ஜப்பான் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார் இவரது முயற்சிகளால் பல மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஜப்பானில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
“ஜப்பான் நாட்டிற்கு பழங்களையும் உணவுகளையும் ஏற்றுமதி செய்வதும் நல்ல முயற்சி தான். ஆனால் ஜப்பானியர்கள் தரத்தில் எந்த சமரசமும் செய்வதில்லை. ஏற்றுமதி தொழிலில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். கடுமையான சோதனைகள் இருக்கும். இதற்கெல்லாம் தயாராக இருப்பவர்கள் நிச்சயம் ஜப்பான் நாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.” என ஜப்பான் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் காசிநாதன், ‘கே.சி.சி.எஸ். இண்டோ ஜப்பான்’ என்கிற இன்ஸ்டால் பக்கத்தின் வாயிலாக ஜப்பான் பற்றிய பல்வேறு தகவல்களையும் பல்வேறு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு சம்பந்தமான தகவல்களையும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தமிழ் வழியில் ஜப்பான் மொழி கற்பிக்கும் முயற்சிகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
ஜப்பான் மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், இவரது சேவைகளுக்கும் பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்து இருக்கின்றன.



