Header Top Ad
Header Top Ad

கோவை பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்- புது வரவு என்னென்ன?

கோவை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவை பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி உள்ளது.

வருகிற 22ஆம் தேதி நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் நிறுவனத்தில் பல்வேறு வகையில் ஆயிரக்கணக்கான பொம்மைகளுடன் கொலு பொம்மை கண்காட்சி துவங்கியுள்ளது.

நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படும். அந்த நாட்களில் பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து தினசரி வழிபாடு செய்வர்.

இந்த நிலையில் வருகிற 22ஆம் தேதி நவராத்திரி பண்டிகை துவங்கப்பட உள்ளதை ஒட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் நிறுவனத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியுள்ளது.

இந்த கண்காட்சி அக்டோபர் நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையிலான கொலு பொம்மைகளை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் பகவான் விஷ்ணு பரமாத்மாவின் தசாவதாரம் செட், விநாயகர் செட், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட், கருடசேவை செட், வாசுதேவர் செட், கோபியர் செட், வளைகாப்பு செட்,பள்ளிக்கூடம் செட்,உழவர் சந்தை செட் உட்பட பல்வேறு வகையிலான குழு கொலு பொம்மைகள் உள்ளன.

Advertisement

அதேபோன்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, அரசியல் தலைவர்களின் பொம்மை,ஆடும் குதிரை, மரப்பாச்சி பொம்மைகள், நடை வண்டி என நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் பல வண்ண குழு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதிய வரவாக மதுரை வீரன் கள்ளழகர் சோட்டானிக்கரை பகவதி அம்மன் திருச்செந்தூர் முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய ஆறுமுக முருகன் மூன்று அடி உயரத்தில் முருகப்பெருமாள் குடும்பம் உட்பட 30-க்கும் மேற்பட்ட வகையிலான புதிய பொம்மைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அனைத்து வகை கிரெடிட் கார்டுகளும் எந்தவித சேவை கட்டணம் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

Recent News