கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை- மூன்று பேரை விரைந்து பிடித்தது எப்படி- கமிஷனர் விளக்கம்…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேரை சுட்டு பிடித்தது குறித்து போலிஸ் கமிஷனர் பேட்டியளித்தார்.

கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்தது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை நடத்தப்பட்டதாகவும் புலன் விசாரணையில் சிசிடிவி காட்சிகள், பல்வேறு ரகசிய தகவல்களின் அடிப்படையில் யார் குற்றவாளிகள் என்பது தெரிய வந்ததாக தெரிவித்தார்.

அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றி செல்வி, கார்த்தி தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்றதாகவும் அப்பொழுது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முற்பட்டதில் ஒரு காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதால் குற்றவாளிகளை தற்காப்பிற்காக சுட்டுப் பிடித்ததாக தெரிவித்தார்.

இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என்றும் மூன்று பேரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார். குனியமுத்தூரில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமினிய பாத்திர வியாபாரங்கள் செய்து வந்த நிலையில் அவர்களுடன் இந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து தங்கி இருந்ததாகவும், துணி வியாபாரம் செய்வதாக அவர்களிடம் இந்த மூன்று பேரும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தற்போது மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை அதில் 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி மீட்கப்பட்டது, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது என்றார். குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரித்துள்ளதாகவும், அதனை உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி இருப்பதாகவும் அங்கிருந்து காவல்துறையினர் ஆய்வு செய்து தெரிவித்தால் அவர்கள் மேல் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பது தெரியவரும் என கூறினார்.

குற்றவாளிகள் மூன்று பேரும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி இருப்பதாகவும், அதில் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அதிகமான குடியிருப்புகள் இருந்ததால் கண்டிப்பாக ஏதாவது வீடுகள் பூட்டப்பட்டிருக்கும் என்று எண்ணி தான் இதனை செய்துள்ளதாகவும் மூன்று மணி நேரத்தில் இந்த திருட்டு சம்பவத்தை மேற்கொண்டு இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் அந்த 12 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் இவர்கள் மூன்று பேரையும் வலது காலில் சுட்டு பிடித்துள்ளதாக குறிப்பிட்டார். உள்ளூர் குற்றவாளிகள் யாரேனும் இவர்களுக்கு உதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஆட்டோ டிரைவர் இவர்கள் மூன்று பேரையும் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் வைத்து பயணம் செய்துள்ளதால் அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றி செல்வி தலைமையில் ஒரு தனிபடை தான் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஒரு தனிப்படையையே குறுகிய காலத்தில் இந்த குற்றவாளிகளை பிடித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

இதேபோன்று கவுண்டம்பாளையம் சுற்றிய பல்வேறு பகுதிகளில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் மட்டும் விரைந்து குற்றவாளிகளை பிடித்தது தொடர்பான கேள்விக்கு, அனைத்து குற்ற சம்பவங்களையும் சமமாக தான் விசாரித்து வருவதாகவும், நமக்கு கிடைக்க பெரும் தகவலின் அடிப்படையில் தான் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும் அதன்படி இந்த சம்பவத்தில் எளிதாக தகவல்கள் கிடைத்ததால் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பான கேள்விக்கு, அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் தேவை இருந்தால் தற்காப்பிற்காக சுட்டு பிடிக்கலாம், சட்டத்தில் அதற்கு இடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் துப்பாக்கியை பயன்படுத்தப்படவில்லை என்றும் அது சந்தர்ப்பசூழல் எனவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பார்த்திபன் என்ற காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தற்பொழுது சிகிச்சை பெற்று நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த குடியிருப்பு நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுததி இருப்பதாகவும் RF ID TAG ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் காவலாளிகள் இருக்கும் பொழுதே அவர்கள் சென்று வந்ததாக தெரிவித்தார்.

பொதுமக்களின் சிசிடிவி கேமராக்கள் காவல்துறையுடன் இணைப்பது குறித்தான கேள்விக்கு, கேபிள் டிவியில் வரக்கூடிய 6 core களில் 1 Core யை கேட்டிருப்பதாகவும் அதுமட்டுமின்றி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகர் முழுவதும் wfc இணைப்புகள் கொடுத்திருப்பதாகவும் அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தால் பொது இடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கப்படும் என தெரிவித்தார்.

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரின் செல் போன் காவல் துறையினரால் பறிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, எங்களுக்கு கிடைத்த க்யூவை நாங்கள் பாதுகாக்க வேண்டும் அதையெல்லாம் அனைவரிடமும் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது அங்கே என்ன நடந்தது என்று விசாரணை மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கூண்டில் ஏறி பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி கூறியதும் புகைப்படங்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.