கோவை: நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருட்களை சேவை மாதிரியில் வழங்கும் (SaaS) கோவையை சேர்ந்த பிரபல செயற்கை நுண்ணறிவு திறன் நிறுவனமான கோவை.கோ (Kovai.Co), அதன் முக்கிய தயாரிப்பான ‘டாக்குமெண்ட் 360’ எனும் மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளதாக இன்று பெருமையுடன் அறிவித்தது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘டாக்குமெண்ட் 360’ எனும் மென்பொருள் தளம், உலகின் சிறந்த தளங்களில் ஒன்றாக வளர்ந்து, முன்னணி அறிவுத்தள வழங்குநர்களுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது. மேலும் 1500க்கும் மேற்பட்ட பெருநிறுவன வாடிக்கையாளர்களை பெற்று, அவர்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.
இப்போது, தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டில் இதை 25 மில்லியன் அமெரிக்க டாலர் பெறக்கூடிய தயாரிப்பாக முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோவை.கோ நிறுவனத்தின் அடிவேராக இருக்கக்கூடிய கோவை நகருக்கு முதலீடுகளை வழங்கவேண்டும் என உறுதியாக இருந்த அதன் குறிக்கோளை வலுசேர்க்கும் விதத்தில் அடுத்த 3 ஆண்டு காலத்தில் ரூ.220 கோடியை இந்நிறுவனத்தின் கோவை மேம்பாட்டு மையம் மேல் முதலீடாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் உருவாக்கிய ‘பிஸ் டாக் 360’ எனும் மென்பொருள் தளம் அதன் தொடர்ச்சியான ஆண்டு வருவாயை 10 மில்லியன் என்கிற இலக்கை கடந்து சென்றுவருகிறது. இந்த நிலையில் இப்போது இதன் மற்றொரு தயாரிப்பான ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருள் தளமும் இந்த மைல்கல்லை கடந்துள்ளது. உலகிலேயே மிகச் சில சுயநிதி ஆதாரத்துடன் இயங்கும் நிறுவனங்களே இப்படி ஒரு சாதனையை செய்துள்ளன. அதில் கோவை.கோ நிறுவனமும் ஒன்று.
“இது கோவை.கோ-வுக்கு மட்டுமல்ல, கோயம்புத்தூர், தமிழ்நாடு, மற்றும் இந்திய மென்பொருள் சேவை சூழலமைப்புக்கே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்,” என்று கோவை.கோ-வின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சரவணக்குமார் கூறினார்.
“நிறுவனங்கள் அறிவை உருவாக்கும், நிர்வகிக்கும், மற்றும் வழங்கும் முறையை செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றியமைக்கும் இந்தக் காலகட்டத்தில், ‘டாக்குமெண்ட் 360’ ஒரு மிக முக்கியமான தளமாக உருவெடுத்துள்ளது. கோயம்புத்தூரில் நாங்கள் முதலீடு செய்யும் ரூ.220 கோடி அளவிலான தொகை, தயாரிப்புப் புதுமையை அதிவேகப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு திறன்களை ஆழப்படுத்தி, இப்பகுதியை ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மையமாகத் திடப்படுத்தும். இங்கிருந்தே மேலும் பல உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கவும் இது வழிவகுக்கும்,” என கூறினார்.
‘டாக்குமெண்ட் 360’ அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 40–45% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மேம்பட்ட பொறியியல், செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, மற்றும் திறமையாளர்களை வளர்க்கும் மையமாக கோயம்புத்தூர் செயல்படும்.
“கோயம்புத்தூரில் ஆழமான தொழில்நுட்பம் (Deep Tech) மற்றும் மென்பொருள் சேவை நிபுணத்துவத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் உலகளாவிய இலக்கை முன்னெடுத்துச் செல்வதுடன், இப்பகுதியை புதுமைக்கான மையமாகவும் உயர்த்தி வருகிறோம்,” என்றும் சரவணக்குமார் தெரிவித்தார்.
‘பிஸ் டாக் 360’, ‘டாக்குமெண்ட் 360’ ஆகிய மென்பொருட்களின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ள நிலையில் இந்த வரிசையில், இந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ‘டர்போ 360’-யையும், கொண்டு செல்ல தேவையான பணிகளை கோவை.கோ முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


