கோவை: அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த விவகாரத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. அதனை அறியாமல் உணவை உட்கொண்ட 44 மாணவ மாணவிகள் உடல் பாதைகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். அன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார், மேயர் ரங்கநாயகி, ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அப்பள்ளியின் சமையலர் மனோகரி, உதவியாளர் கமலா, சத்துணவு அமைப்பாளர் கெளசல்யா ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

