மருதமலை கும்பாபிஷேகம்: மருதமலை முருகன் கோவிலின் ஸ்தல வரலாறு, சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையானதாகப் பார்க்கப்படுவது மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். இந்த கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது.
முருகன் வரலாறு
சிவபெருமானின் கண்ணிலிருந்து ஆறு குழந்தைகளாக வெளிவந்தாராம் முருகன். அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனராம்.
பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகக் கட்டி அணைக்கும் போது, அவர்கள் ஆறு பேரும், ஒரே குழந்தையாக முருகனாக மாறியதால் அன்று முதல் ஆறுமுகன் என்று முருகர் அழைக்கப்பட்டார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இயற்கை எழில் சூழ, கடல்மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழுநிலை கோபுரத்துடன் மருதமலை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் என்ற தொன்மையான திருத்தலம் அமைந்துள்ளது.
மருத மரங்கள் நிறைந்த மலையில் இக்கோவில் அமையப்பெற்றதால் மருதமலை என்ற காரணப் பெயரை இக்கோவில் பெற்றது.
கோவை நகரிலிருந்து, 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலைக்கோவிலில் மொத்தம் 837 படிகள் உள்ளன. கோவிலுக்கு மலைப்பாதை வழியாக வாகனங்கள் மூலம் செல்லலாம். கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த பாதையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் நிர்வாகத்தின் பஸ்களில் மட்டும் செல்லலாம்.
சன்னதிகள்

கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். அருகே பெரிய மயில் முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி உள்ளது
மேலும், சப்த கன்னிகளின் கோவில், பாம்பாட்டி சித்தரின் கோவிலும், பட்டீசுவரர், மரகதாம்பிகை சன்னதிகளுடன், வரதராஜ பெருமாள் , மற்றும் நவக்கிரக சன்னதி, இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன.
பஞ்ச விருட்ச விநாயகர்
பொதுவாக விநாயகர் அரச மரத்தடியில் தான் காட்சி தருவார். ஆனால், இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். எனவே, இவரை பஞ்ச விருட்ச விநாயகர் என்று அழைக்கின்றனர். படிக்கட்டு வழியாகக் கோவிலுக்கு வருபவர்கள், பஞ்ச விருட்ச விநாயகரைத் தாண்டி தான் சன்னதிக்கு வர முடியும்.
முருகன் சன்னதி
மருதமலை முருகனின் சிலை இங்கு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த சிலை பாம்பாட்டி சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதில் வலது கையில் கொலுசை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றி முருகன் காட்சியளிக்கிறார். இந்த சிலையில் தலையின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான குதிரை வால் (குடுமி) மற்றும் கால்களில் கொலுசுகள் உள்ளன.
முருகன் அலங்காரங்கள்

முருகன் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அரச ஆபரணங்கள், விபூதி காப்பு மற்றும் சந்தன அலங்காரங்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அலங்காரங்களாகும்.
கார்த்திகை, தைப்பூசம் போன்ற விழா நாட்களில் தங்கக்கவசத்துடன் காட்சியளிக்கிறார்.
கல்வெட்டுகள்
திருமுருகன் பூண்டி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் மருதமலை முருகன் கோவிலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த கல்வெட்டு ஏறக்குறைய 1,200 ஆண்டுகள் பழமையானது.
ஸ்தல வரலாறு
நவகோடி சித்தர்களில் முதன்மையானவர்கள் பதினெண்சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த காலம் கி.பி 1200 ஆகும்.

கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தைச் சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில்.
இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம், மாணிக்கக் கல் உடைய நாக சர்ப்பம் உள்ளது என்றனர்.
இதைக்கேட்டு மலை மீது ஏறிய பாம்பாட்டி சித்தருக்கு, சாட்டை முனி சித்தர் காட்சியளித்து, குண்டலினி, கூடு விட்டு கூடு பாய்தல், பிராணாயாம பயிற்சிகளைப் பாம்பாட்டி சித்தர்க்கு கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருத மரத்தடியில் பெருகும் மருத தீர்த்தத்தைக் கொடுத்து, சர்ப்ப ரூபத்தில் அவருக்குக் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு.
பாம்பாட்டி சித்தர் ஆலயம்
இங்கு பாம்பாட்டி சித்தரின் குகை அமைந்துள்ளது. அவர் வலது கையில் மகுடியுடனும் இடது கையில் தடியுடனும் இருக்குமாறு சித்தரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முருகனுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பு பாம்பாட்டி சித்தருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இன்று வரை பாம்பாட்டி சித்தர் இரவில் குகை வழியாக மருதமலை முருகனுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்து வருவதாக நம்பப்படுகிறது.

பாம்பாட்டி சித்தரின் சிலை முன்பு தினமும் பக்தர்கள் கிண்ணத்தில் பால் ஊற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஊற்றிய பால் தினமும் குறைந்து இருக்குமாம், இந்த பாலை கொண்டு தான் பாம்பாட்டி சித்தர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
பாம்பாட்டி சித்தரின் வழிபாடு
ஆடம்பர அலங்காரங்கள் இல்லாதது, அடக்கமான மற்றும் ஆடம்பரமற்ற வாழ்க்கையை நடத்துதல், பணிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், உலக ஆசைகளிலிருந்து விலகுதல் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களை விட ஆன்மீக நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல் என்ற கருத்தைப் பிரதிபலிக்கிறது.
இது ஞானம் மற்றும் சுய-உணர்தல் நோக்கிய ஒருவரின் பயணத்தில் எளிமை மற்றும் மனநிறைவின் மதிப்பை நினைவூட்டுகிறது.
வேண்டுதல்
மருதமலையானை மனமுருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்றும், நீண்ட நாட்கள் திருமணமாகாதவர்கள் சுவாமிக்கு பொட்டுத்தாலி மற்றும் வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கண்டிப்பாக திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
குழந்தை இல்லாத தம்பதியினர் தொடர்ந்து 5 வாரம் வெள்ளிக்கிழமை மருதமலையானை வழிபாடு செய்தால் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

எப்படிச் செல்லலாம்?
காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டால், மருதமலை முருகன் கோவிலை 16 கி.மீ., பயணித்து அடைந்து விடலாம். உக்கடத்திலிருந்து 17 கி.மீ., தூரம் பயணிக்க வேண்டும்.
லாலி ரோட்டில் இருந்து மருதமலை சாலையில் 12 கி.மீ., நேர் சாலையில் பயணித்து முருகன் கோவிலைச் சென்றடையலாம்.