கோவை: கோவை குற்றாலம் சுற்றுலாத்தளத்தில் வனத்துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய மெகா கிளீனிங் கேம்ப் நடத்தி குப்பைகளை அகற்றியுள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து “மேசிவ் பிளாஸ்டிக் கிளீனிங் அண்ட் கலெக்ஷன்” நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கோவை குற்றாலம் பகுதியில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதன்மை வனப்பாதுகாவலர் சைதன்யா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சதீஷ்குமார், சுமித்ரா பாய், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் கார்த்திக் மற்றும் மோகன ஜெயவள்ளி, காருண்யா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நெகிழி அகற்றும் முகாமில் கலந்துகொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சூழலியல் சுற்றுலாத்தலமான கோவை குற்றாலம் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழி குப்பைகளை வீசி சென்று விடுகின்றனர்.
இது இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் பேராபத்தை விளைவித்து வருகின்றன. அதனை தடுக்கும் வகையில், மத்தவராயபுரம் கிராம ஊராட்சி பகுதிகள், கோவை குற்றாலம் பகுதிக்கு உட்பட்ட சாடி வயல், சீங்கப்பதி, கோவை குற்றால அருவி பகுதி என பல இடங்களில் இருந்த நெகிழி குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட நெகிழி குப்பைகள் ஆலந்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் மறுசுழற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. அதேசமயம் நெகிழிக்கு மாற்றாக தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மஞ்சள் துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வீசிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்த அதிகாரிகள், நெகிழிக்கு மாற்றாக வந்த மஞ்சள் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
காடுகள் மலைகள் இயற்கையின் கொடை என தெரிவித்து அவர்கள் அதனை பாதுகாக்கும் பொருட்டு, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய களப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.