கோவை: சொந்த ஊர் செல்வதற்காக கோவை ரயில் நிலையத்தில் இன்று ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் வரிசையில் நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
தொழில் நகரமான கோவையில் தமிழகம் மட்டுமின்றி பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
பெரும்பாலானோர் தொழிற்சாலை, மில், கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பே சொந்த ஊர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் கடந்த சில நாட்களாக கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் உள்ளது. சிலர் ரயிலில் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதால் நெரிசல் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்று மதியம் ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 13352) பிளாட்பாரம் 3க்கு வந்தடைந்தது. இதில் பயணம் செய்ய நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மனைவி, குழந்தைகள் உடன் வந்திருந்தனர்.
அவர்களை வரிசையில் நிறுத்தி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அனுப்பி வைத்தனர்.





