கோவை: பிங்க் பேட்ரோல் மூலம் உக்கடம் பேருந்து நிலையத்தில் தனிமையில் நின்றிருந்த திண்டுக்கல் சிறுமியை போலீசார் மீட்டு பத்திரமாக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றத்தினை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும் விதமாக ‘பிங்க் பேட்ரோல்’ கொண்டு வரப்பட்டுள்ளது. சிறந்த முறையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று உக்கடம் பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனியாக நின்றுக் கொண்டிருந்தார்.
அவரை பார்த்த ‘பிங்க் பேட்ரோல்’ போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி வீட்டில் கோபித்து கொண்டு திண்டுக்கலில் இருந்து கோவை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை மீட்ட ‘பிங்க் பேட்ரோல்’ போலீசார் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் சிறுமி மாயமானதாக திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மகளிர் போலீசார் வத்தலக்குண்டு போலீசாருக்கும், சிறுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவை விரைந்து வந்தனர்.
அவர்களிடம் சிறுமியை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

