கோவை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்கசிவு தடுப்பான்களை பொருத்த கோவை மின் வாரிய ஆய்வாளர்கள் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவ மழை நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. இந்த காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், புயல் மற்றும் பெருமழை காலத்தில் மின் விபத்துகள் தவிர்ப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை கோவை தெற்கு மற்றும் வடக்கு மின் ஆய்வாளர்கள் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-
வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் அறுந்து, தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், புதை வடங்களினால் மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மழை காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.
மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மின்சாரப் பெட்டி அருகே தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்னல் ஏற்படும் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.
கான்கிரீட் வீடு போன்ற பெரிய கட்டிங்களிலோ, பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையலாம். மழை நேரத்தில் மின்னல் ஏற்படும் சமயத்தில் வீட்டு உபயோக மின்சாதனங்கள் மற்றும் அலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
மழை காலங்களில் வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்சிசிபி, ஆர்சிபிஓ எனப்படும் மின் கசிவு தடுப்பான்களை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும்.
மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட ஈர அறைகளில் சுவிட்களை பொருத்த கூடாது. தொலைக்காட்சி ஆன்டெனாவை வீட்டின் அருகே செல்லும், மேல் நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே மாற்றி விட வேண்டும். பழுது பட்ட மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். மழையின் போது பிளக் பாயிண்டுகளுக்கு அருகே அமைந்துள்ள ஜன்னல்களை மூட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.



