கோவை: MyV3 Ad நிறுவன புகார் தொடர்பாக கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் மீது பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்…
கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த MyV3 ad என்ற நிறுவனம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த நிறுவனம் தனது குடும்பத்தினரை இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறி சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் ஒரு புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தான் சைபர் கிரைம் காவல்துறை அலுவலகத்தில் பிரச்சனை செய்ததாக ஆய்வாளர் அருண்குமார் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இது சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் தன்னை அலைக்கழிப்பதாகவும் அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் “இன்று விசாரணை என்று அழைத்த நிலையில் விசாரணை ரத்து செய்யப்பட்டு விட்டது 7 மாதங்களாக என்னையும் என் குடும்பத்தையும் சித்திரவதை செய்து வருகிறார்கள். இன்று முதல் சாகும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் ஆட்சியரை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காவல்துறை அந்த MYV3 நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும் என் மீது சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் பொய் வழக்கு பதிவு செய்து சித்திரவதை செய்வதாக தெரிவித்தார். தற்பொழுது வரை என்னுடைய புகாருக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றார்.
மேலும் கோவையில் 15 காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என தெரிவித்த அவர் திருபுவனம் அஜித் குமாருக்கு நடந்தது எனக்கு ஏற்கனவே நடந்திருக்கும் என்றும் மாநகர காவல் ஆணையாளர் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தும் நிதி இல்லை என்பதால் சிசிடிவி பொருத்தவில்லை என்று கூறியதாக குற்றம் சாட்டினார்.
இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கு ஒரு நாள் அவகாசம் கேட்டு இருப்பதாகவும் எனவே 24 மணி நேரம் கழித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது குடும்பத்துடன் நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
மேலும் காவல்துறை என் மீது பொய் வழக்கு போட்டு சித்திரவதை செய்து வரும் நிலையில் எப்படி காவல்துறையிடமே பாதுகாப்பு கோர முடியும் என கேள்வி எழுப்பிய அவர் இது சம்பந்தமாக டிஎஸ்பிஐ சந்தித்து புகார் அளிக்க சென்றால் குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடையை கூறி அங்கு சென்று புகாரை அச்சிட்டு பெற்றுக் கொண்டு வருவதாக கூறுவதாகவும் அங்கு ஒரு புகாருக்கு 700 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தன்னுடைய புகார்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்துடன் போராட்டத்தை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
Comments are closed.