கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹாலில் தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தேசியக்கொடி

இங்கு கதர், வெல்வெட், மைக்ரான் துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளால் ஆன தேசியக்கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மைக்ரான் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.1,500 வரையும், வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் ரூ.100 முதல் ரூ.2,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை (கொடியின் அளவுக்கேற்ப) அசோக சக்கரத்தை, ஸ்கிரீன் பிரின்டிங் செய்து தயாரித்து வருகின்றனர்.

கோவையில் தயார் செய்யப்படும் கொடிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கொடி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
