கோவை: கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கலை கல்லூரி மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதியான இன்று மத்திய அரசு சார்பில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் கைத்தறி தொழில் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, கோவையில் அரசு கலைக்கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், கைத்தறி ஆடைகள் அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
தொடர்ந்து மாதிரி தறி இயந்திரத்தில், நெசவு முறை குறித்தும் செயல்விளக்கத்துடன் அறிந்து கொண்டனர்.