விவாகரத்து கோரிய 4 தம்பதிகளை இணைத்த கோவை மக்கள் நீதிமன்றம்!

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 5540 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்புமிகு விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.

Advertisement

இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் ஏற்பட்ட நான்கு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த திரு. ஷியாம் பிரசாத் மற்றும் அவரது தாயார் ஆகியோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூபாய். 50 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள். சிவில் வழக்குகள் (நிலம் சொத்து, பாகப்பிரிவினை,வாடகை விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள். வங்கி கடன்கள் மற்றும் கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் (Pre-Litigation) ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 5540 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

இதன் மொத்தத் தீர்வு தொகை 40 கோடியே 45 இலட்சத்து 58 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும் மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 150 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 4 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது. மேலும் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் 258 தீர்வு காணப்பட்டது. காசோலை வழக்குகள் 163 தீர்வு காணப்பட்டது.

Recent News