கோவை: கோவை உட்பட பல்வேறு இடங்களில் நீட் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு விதமாக உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமத்துவமான கல்வி முறையை அமலுக்கு கொண்டுவராமல் தேர்வில் மட்டும் ஒரே மாதிரியான முறையைக் கொண்டு வந்துள்ளதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
படித்த பாடத்திட்டங்களுக்கு பதிலாக, மாற்றுப் பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் ஏழை மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து கோச்சிங் சென்டர் செல்ல முடியாமல் திணறி வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
தமிழகத்தில் இந்த தேர்வு முறையால் மாணவர்கள் விரக்தியடைந்து தவறான முடிவுகளை எடுக்கும் நிலையும் தொடர்கிறது. பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்புகளைத் தெரிவித்தும் மத்திய அரசு இந்த விஷயத்தில் மனமிறங்கவில்லை.
மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளை மீறி இன்று நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்களும் தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் தேர்வு மையத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று திருப்பூரில் தேர்வு மையத்திற்குச் சென்ற மாணவி ஒருவரது சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. உடையை மாற்றிவந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாணவியிடம் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ந்துபோன மாணவி செய்வதறியாது திகைத்த நிலையில், அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் அந்த மாணவியை அழைத்துச் சென்று, அவருக்கு மாற்று உடை வாங்கிக்கொடுத்து, மீண்டும் தேர்வு மையம் அழைத்து வந்தார்.
தஞ்சையில், தேதியுடன் கூடிய புகைப்படம் இல்லை என்று மாணவர்கள் பலர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது அங்கிருந்த மக்கள் திரண்டு வந்து மாணவர்களுக்கு உதவினர். அருகிலிருந்த ஸ்டூடியோவை மாணவர்களுக்கு அடையாளம் காட்டி, அங்கு உடனே மாணவர்கள் புதிய புகைப்படம் எடுக்க உதவினர்.
மாநிலம் முழுக்க இதுபோல் பல இடங்களில் தமிழக மக்கள் மாணவர்களுக்கு உதவினர்.
கோவை

கோவை மாநகரில் மட்டும் 11 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 5,736 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே தேர்வு மையத்திற்குப் பதற்றத்தில் வந்த மாணவர் ஒருவர் ஆவணங்களை மறந்துவிட்டார்.
மையத்திற்குள் நுழைய சில நொடிகளே மீதமிருந்த நிலையில் மாணவனை தேர்வறைக்கு அனுப்பிவிட்டு, ஓடிச் சென்று அவரின் தந்தையிடம் ஆவணங்களை வாங்கி வந்து கொடுத்து உதவினார் தலைமை காவலர் பாபு.
“ஒரு நிமிடம் தான் இருக்கிறது சீக்கிரம் தேர்வு மையத்திற்குள் போ, பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று அங்கிருந்த பத்திரிகையாளர்களும் மாணவரை தேர்வு மையத்திற்குள் அனுப்பினர்.
இது அங்கிருந்த பெற்றோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.