கோவை: காமராஜர் சாலை முறையாகப் பராமரிக்கப்பட்டிருந்தால் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டரின் மரணம் நிகழ்ந்திருக்காது என்று கூறி கோவை மக்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூரில் இருந்து ஹோப்காலேஜ் சந்திப்பு வரை செல்கிறது காமராஜர் சாலை. இந்த சாலையை, கோவையில் அதிக விபத்துகள் நிகழும் ப்ளாக் ஸ்பாட்டாக வரையறுத்துள்ளது கோவை மாநகர காவல்துறை.
இதனிடையே பல மாதங்களுக்கு முன்பு இந்த சாலை தோண்டப்பட்டது. ஆனால், மீண்டும் புதிய தார் சாலை அமைக்கப்படவில்லை. மாறாக மண் கொண்டு மூடப்பட்டது. ஏற்கனவே குறுகலாக உள்ள இந்த சாலையில், சுமார் 5 அடி அகலத்திற்குக் குண்டும் குழியுமான பகுதி உருவானது.
இதனால் தினமும் அவ்வழியாகச் செல்லும் மக்கள் பலர் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தினமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்து வரும் மக்களில் சிலர், இந்த ஓட்டை உடைசல் சாலையில் தவறி விழுகின்றனர்.
அதில், சிலருக்கு கை, கால் முறிவும் ஏற்படுகிறது. இந்த சாலையை உடனே புதுப்பிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதிகாரிகள் இதனைக் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இதனிடையே இந்த சாலையில் தனது மகனுடன் சென்ற மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி, தவறி விழுந்து சரக்கு வாகனத்தின் டயரில் சிக்கி, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தின் சிசிடிவி காட்சிகள்
ஏன் இந்த மெத்தனம்?
இந்த காட்சிகளின் அடிப்படையில், தோண்டப்பட்ட சாலையில் இறங்காமல் இருக்க பானுமதியின் மகன் முயன்றதும். அப்போது, சரக்கு வாகனத்தின் அருகில் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கியிருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
காமராஜர் சாலை தோண்டப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடனேயே புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தால் இன்று பானுமதி உயிரிழந்திருக்க மாட்டார். அதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஓட்டை உடைசல் சாலையில் விழுந்து காயமுற்றிருக்க மாட்டார்கள் என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோவையிலேயே ஆபத்தான சாலைகளில் ஒன்று என்று வரையறுக்கப்பட்டிருந்தும், இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ராமநாதபுரம் சிக்னல் அருகே இதேபோன்று மோசமான சாலையால் ஒரு உயிர் பறிபோனது. பின்னர் அங்கு உடனே சாலை அமைக்கப்பட்டது. இதனிடையே தற்போது சிங்காநல்லூரிலும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. குண்டும் குழியுமான சில சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் தவறி விழுவதைப் பார்த்து, அங்குள்ள போலீசாரே மண்ணை அள்ளிக்கொட்டி அந்த சாலையை தற்காலிகமாக சரி செய்வதும் தொடர்கிறது.