கோவை: நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவையில் நீலாம்பூர் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய பொதுமக்கள், அவசர காலத்தில் சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் பீளமேடு காவல் நிலையங்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இது மக்களை அலைக்கழிப்பதோடு, குற்றச்சம்பவங்களை அதிகரிக்கும் என்றும், நீலாம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளை உள்ளடக்கிய பிரத்தியேக காவல் நிலையம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே நீலாம்பூரில் ரூ.4.88 கோடி மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் அரசுத்தரப்பு கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நீலாம்பூரில் அதிகளவில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மற்றும் நடவடிக்கைகளை போக்கிரிகளின் கண்காணிக்கவும், கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக காவல் நிலையம் ரூ.4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.