கோவை: கோவையில் புதிய பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மூர்த்தி.
பதிவுத்துறை சார்பில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல். சங்கங்கள். சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிர்வாக மற்றும் பொதுமக்கள் நலனுக்காக கோயம்புத்தூர் பதிவு மாவட்டத்தை பிரித்து கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் தெற்கு என புதியதாக 2 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.
அதில் கோயம்புத்தூர் வடக்கு பதிவு மாவட்டத்திற்காக புதியதாக ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று திறந்து வைத்தார்.
இதில் மாவட்டப்பதிவாளர் நிர்வாகம், மாவட்டப்பதிவாளர் தணிக்கை அலுவலகம் மற்றும் 1 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



