நீலகிரி: நீலகிரியில் முதல் தலைமுறை பட்டியலின மாணவியின் கல்வியை பாழாக்கியமைக்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் இயக்குனருக்கு நோட்டீஸ் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு உயர்நிலை பள்ளியில் படித்த பட்டியலியன மாணவி பத்தாம் வகுப்பில் மூன்று தேர்விலும் தோல்வியடைந்த நிலையிலும், 2023ம் ஆண்டு கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பதினொன்றாம் வகுப்பில் அம்மாணவிக்கு சேர்க்கை நடத்தினார்.
அப்போது, அந்த மாணவி துணை தேர்விலும் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றார். தலைமை ஆசிரியையின் அஜாக்கிரதையால், அந்த மாணவியை 11ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பில் தொடர அனுமதித்தார். அந்த மாணவி 11 மற்றும் 12ஆம் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் கல்லூரி சேர்க்கைக்காக சென்றபோது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இல்லை என கூறிவிட்டனர். பின்னர் தலைமையாசிரியை, கல்வி அதிகாரிகள் அந்த மாணவியின் எட்டாம் வகுப்பு சான்றிதழை வைத்து, குன்னூரில் உள்ள அரசு ஐடிஐயில் சேர்த்துவிட்டு தப்பித்துக் கொண்டனர்.
இதனால் மாணவி படித்த இரண்டு ஆண்டுகள் வீணாய்ப் போனது, மாணவியின் உயர்கல்வி கனவும் தகர்ந்தது. இந்த விவகாரம் வெளியே வந்த பின்னரும் கூட, மாநில முதல் மாவட்டம் வரை உள்ள கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். மேலும், மாணவிக்கான நீதியை வழங்கவில்லை.
பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகி தினேஷ் ராஜா தலையிட்டு , மாணவியின் கல்வியை சீரழித்த கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவியின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற நடவடிக்கை செய்யக்கோரியும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்களை செல்லத்தக்க வகையில் அரசாணை பிறப்பிக்க கோரியும் கடந்தாண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் அளித்தார்.
அதன் பேரில், தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கும் மாணவி கல்வி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன கேள்வி எழுப்பி, 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களை எச்சரித்துள்ளது.
அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த மாணவிக்கு நீதி வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு சக மாணவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

