இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லை என்றும் உடனடியாக அரசு வேலை தர வலியுறுத்தியும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முகமூடியை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது…
கோவை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 13,331 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களாக நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பல வருடங்களாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் இருந்து வரும் சூழலில் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் ஒரு புறம் இருந்தாலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் இன்று அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தேர்ச்சி பெற்ற நியமன தேர்வர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியான வந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முகமூடியை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தினர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்பொழுது வரை அரசு தங்களுக்கு வேலை வழங்கவில்லை என தெரிவித்தனர் அனைத்து தகுதியும் தங்களுக்கு இருந்தும் பல ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை எனவும் ஆனால் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுவதாக தெரிவித்தனர். அரசு வழங்கும் தொகுப்பூதியத்திலாவது பணியாற்ற நாங்கள் தயார் என்றும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.
காலி பணியிடங்கள் அதிகமாக இருந்த பொழுதிலும் குறைந்த அளவிலேயே நிரப்பப்படுவதாக கூறிய அவர் அரசு உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு தங்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மருத்துவ நுழைவுத் தீர்மான நீட் தேர்வை விட எங்களது நிலைமை கொடுமையானது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.