கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிவிட்டு, போலீசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த அதிகாரியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறையைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). விவசாயி. இவர் வாரிசு சான்றிதழ் கோரி மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று வெற்றிவேல் கூறியதாகத் தெரிகிறது.
முதலில் மறுத்த கிருஷ்ணசாமி பின்னர் முதற்கட்டமாக ரூ.1,000ஐ வெற்றிவேலிடம் கொடுத்தார். பின்னர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிருஷ்ணசாமியிடம் வழங்கினர். மேலும், லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் போலீசார் கிருஷ்ணசாமியை மறைந்திருந்து கண்காணித்தனர்.
வெற்றிவேல் ஏற்கனவே கூறியபடி கிருஷ்ணசாமி சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள புட்டுவிக்கி பகுதிக்குச் சென்றார். அங்கு பணத்தை வெற்றிவேலிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார் வெற்றிவேலை மடக்கினர். போலீசாரைக் கண்ட வெற்றிவேல் உஷாராகி தனது இருசக்கர வாகனத்தில் தப்பினார்.
சினிமா பாணியில் போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். போலீசார் தன்னை விடாமல் துரத்தி வருவதைப் பார்த்து பீதியடைந்த வெற்றிவேல், பேரூர் குளத்தேரி சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். மேலும், பேரூர் குளத்தில் குதித்தார். தான் வாங்கிய லஞ்சப்பணத்தை குளத்தில் வீசியெறிந்தார்.
தொடர்ந்து போலீசாரும் குளத்தில் குதித்து, வெற்றிவேலைப் பிடித்தனர். மேலும், குளத்தில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளில் சிலவற்றைக் கைப்பற்றி, வெற்றிவேலை பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், குளத்தில் குதித்துத் தப்ப முயன்றதும், அவரை போலீசார் விரட்டிப் பிடித்ததும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.