கோவை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தால் செம்மொழிப் பூங்காவிற்கு வரும் மக்கள் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சியுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி மதிப்பில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் 25ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த 11ம் தேதி முதல் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
பொதுமக்கள், சிறுவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் என செம்மொழி பூங்கா பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த 11 நாட்களில் 1 லட்சத்தை கடந்து சாதனைப்படைத்து வருகிறது.
இதில் விடுமுறை நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செம்மொழி பூங்காவை கண்டு ரசித்து சென்றுள்ளார்.
இதனால் காந்திபுரம் சுற்றிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மேம்பாலத்தின் ஓரத்தில் மக்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றனர்.
இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் வழக்கத்தை விட அதிகளவில் மக்கள் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் இடங்கள் இருப்பது குறித்தும் போலீசார், மாநகராட்சியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
செம்மொழி பூங்காவில் 1000 இரு சக்கர வாகனங்கள், 453 கார்கள், 10 பஸ் நிறுத்தும் அளவிற்கு இடவசதி உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் நிறுத்த முடியாமல் மக்கள் அவதி அடைகின்றனர்.
இதையடுத்து செம்மொழி பூங்கா வாகன நிறுத்தும் இடம் மட்டுமில்லாமல் மாற்று இடங்கள் கூடுதலாக உள்ளதா என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. வஉசி உயிரியல் பூங்கா, மத்திய சிறை பழைய நுழைவாயில் ஆகிய இடங்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அங்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வாய்ப்பு உள்ளதா எனவும் மாநகராட்சியுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

