கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோயம்புத்தூரில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.
கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், கோயம்புத்தூர் பாரா டேபிள் டென்னிஸ் குழு, தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டி 2025 கோயம்புத்தூரில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடத்தியது.
இந்த முக்கியமான நிகழ்வில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும், காயத்தின் வகை அடிப்படையில் வகுப்பு 1 முதல் 10 வரை போட்டியிட்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் என பல்வேறு சுற்றுகள் நடத்தப்பட்டன.
பின்னர் மாலை 5 மணி அளவில் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் . A. சரவண சுந்தர் .பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி விளையாட்டாளர்களின் உறுதி மற்றும் ஊக்கத்தை பாராட்டும் உரையை நிகழ்த்தினார்.
நாள் முழுவதும் பரபரப்பாக நடந்த போட்டிகளில் கடும் போட்டி தன்மை, உற்சாகமான செயல்பாடுகள், மற்றும் சிறந்த விளையாட்டு மனப்பான்மை வெளிப்பட்டது.
கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் இஞ்சூரி பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ் .ராஜசேகரன் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதில் கங்காவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.