கோவை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொது செயலாளர் காசு நாகராசன் தலைமையில் ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தனர்.
அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களால் கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும். கோவை மருத்துவமனைகள் நிறைந்த பகுதி என்பதால், புறநகரப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், திருச்சி துறையூரில் முன்னர் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவ உதவிக்காக வரும் பொதுமக்களும், மருத்துவச் சேவையில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களும் பாதுகாப்பாகச் செல்ல காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.