கோவை: பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் இதுகுறித்து BPCL நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
எந்த நாட்டில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை விதிக்க எந்த உரிமையும் இல்லை என்று நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், நாட்டில் எரிபொருள் இருப்பு தீர்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
மேலும், இருக்கும் குறைந்தபட்ச எரிபொருளைக் கொண்டு, கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் குறுஞ்செய்திகள் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்களில் சிலர் பீதியடைந்து எரிபொருளை அளவுக்கு அதிகமாக சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே BPCL நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், “எரிபொருள் பற்றாக்குறை என்பது நாட்டில் இல்லை. அவ்வாறு பரப்பப்படும் தகவலில் எந்த வித அடிப்படை உண்மையும் இல்லை. போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.” என்று அறிவித்துள்ளது.



