கோவை; கோவையில் காமராஜர் பிறந்தநாளை அரசியல் கட்சியினர் பலரும் கொண்டாடினர்.
கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் காமராஜரின் சாதனைகளை அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிட்டு புகழ்ந்துள்ளனர்.
Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை வீரகேரளம் செட்டிபாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அழகு ஜெயபாலன், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மாநில காங்கிரஸ் செயலாளர் பழையூர் செல்வராஜ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காயத்ரி ஆகியோர் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காமராஜரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் புத்தாடைகள் வழங்கி காமராஜரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
அதே போல் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, தமிழக வெற்றி கழகம் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இதே போன்று பல்வேறு இடங்களில் திமுக, அதிமுக கட்சியினரும் காமராஜர் பிறந்தநாளில் மரியாதை செலுத்தினர்