கோவை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் மண்பாண்டங்கள் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மெல்ல மெல்லத் தயாராகி வருகிறது.

இதனிடையே, கோவை கவுண்டம்பாளையம் அருகே பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாராகும் மண்பாண்டங்கள் கோவை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளுக்கும் திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் மாரிமுத்து கூறுகையில்,
"கால் அடி முதல் 3 அல்லது 5 அடி வரை கூட மண்பாண்டங்கள் தயாரித்து வருகிறோம். இன்று பானை செய்தால், நாளை அதனை தட்டி தயார் படுத்துவோம். இன்று தயாரிக்கும் பானையை நாளை காய வைப்போம். அதனைத் தொடர்ந்து 100 அல்லது 150 பானைகள் சேர்ந்தவுடன் அவற்றை ஒன்றாகச் சுட வைப்போம்
எங்களுக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் பானை செய்வதிலும் எங்கள் வாழ்வாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.” என்றார்.

விற்பனையாளர் கிருஷ்ணவேணி கூறுகையில்,
கவுண்டம்பாளையத்தில் நாங்கள் 5 தலைமுறைகளாக பானை செய்து விற்பனை செய்து வருகிறோம். பொங்கலுக்காக தற்போது பானைகள் தயாராக உள்ளன. எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய தகுந்த இட வசதி எங்களுக்கு இல்லை. அதனை ஏற்படுத்தித் தர வேண்டும்." என்றார்.

இந்த பொங்கல் பானைகள் ரூ.150 முதல் அளவுக்கு ஏற்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வீடியோ காட்சிகள்



