கோவை: ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் 25 பேரை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று, மீண்டும் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.
பிளைட் ஆப் பேண்டஸி (Flight Of Fantasy) எனும் திட்டம் மூலம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு இதுபோன்று ஏழை குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று அவர்கள் வாழ்வில் நிச்சயம் உயரப்பறக்கமுடியும் என்பதை உணர்த்திவருகிறது.
இம்முறை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் கோவை ஜெம் ம்ருத்துவமனை இணைந்து 25 ஏழை குழந்தைகளை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்றனர்.
இந்த சுற்றுலாவின் போது கோவையிலிருந்து அதிகாலை சென்னைக்கு குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்கள் மற்றும் ரவுண்ட் டேபிள் அமைப்பினர், தன்னார்வலர்கள் உடன் விமானத்தில் சென்று, அங்கிருந்து சென்னை கோளரங்கம் மற்றும் அக்குவாரியம் சென்றனர். அறிவியல் மற்றும் நீர்வளம் பற்றி அங்கு அவர்கள் தெரிந்துகொண்டனர்.
பிளைட் ஆப் பேண்டஸி’ திட்டத்தின் கன்வீனர் மோகன்ராஜ் கூறுகையில், “இந்த முயற்சி என்பது வெறும் அவர்களை விமானத்தில் அழைத்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்களின் கனவுகள் பெரிதாக இருக்கவேண்டும். வானளவு உயரவேண்டும் என்ற சிந்தனையையும், நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துவருகிறோம். இந்த சிறுவர், சிறுமியர் கண்களில் நாங்கள் கண்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் எங்களுக்கு மன நிறைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது,” என்றார்.