கோவை: கோவை துடியலூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கால்நடை துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக துடியலூர் பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், ஆகியோர் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேபிஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நோட்டீஸ்களை விநியோகம் செய்தனர்.
2026 பிப்ரவரி மாதங்களுக்குள் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மாநகராட்சியில் தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 2 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு கால்நடை மருத்துவர், 2 நாய் பிடிக்கும் பணியாளர்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.