கோவை: ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்தும் டெல்லியில் இன்று ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.
அப்பொழுது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு எம்பிக்கள் அதில் கைது செய்யப்பட்டனர்.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். அக்கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
அப்பொழுது காவல் துறையினர் அவர்களை தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் ரயில் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.