கோவை: டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் இரண்டாம் நாள் மறியல் போராட்டத்தில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட தயாராவோம் என அறிவித்துள்ளனர்.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜாக் ) அமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்த முயன்றனர். தொடர்ந்து ஆசிரியர்களும் காவல்துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு மாநில தலைவர் அரசு, ஆசிரியர்கள் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை கேட்டு தான் போராடி வருவதாக தெரிவித்தார். மேலும் எங்கள் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட அறிவித்துள்ளதாகவும் அதற்கு தயாராவோம் என கூறினார்.